கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் மனு கொடுக்க வந்த பெண்ணால் பரபரப்பு.
October 1, 2019
கோவையில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாவட்ட கலெக்டர் ராசாமணி மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மனு அளிக்க வருபவர்களிடம் முழுமையாக சோதனை செய்த பின்னரே அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண் கையில் மனு உடன் தன்னுடைய கைகளில் துணியால் மன்னனை கேனை மறைத்து வைத்து உள்ளே செல்ல முற்பட்டார். அப்போது அதை சோதனை செய்த போலீசார் மண்ணெண்னை இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக அந்தப் பெண்ணிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் விசாரணையில் கோவை அன்னூர் குப்பனூரை சேர்ந்த முருகனின் மனைவி வசந்தா (வயது 35), அவர் அதே பகுதியில் வசிக்கக்கூடிய ஊரின் முக்கிய பிரமுகர் விஜயக்குமார் என்பவரிடம் தன்னுடைய 17 பவுன் தங்க செயினை அடகு வைத்து தரும்படி கூறியதாகவும். அதன்பின்னர் அதற்கான மொத்த பணமான 2 லட்சத்து 17 ஆயிரத்து செலுத்தி விட்டதாகவும், நகையை மீண்டும் கேட்டதற்கு உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் நகையை திரும்ப தர முடியாது என அவர் கூறிவிட்டார். ஆதலால் மன உளைச்சல் ஏற்பட்டு மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து கொள்ள வந்ததாகவும் தெரிவித்தார். போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.